Saturday, 26 October 2019

🛑🔴கீழடி - புதிய கண்டுபிடிப்புகள் - சாதாரண மக்களின் பார்வை !!



பொதுமக்கள் அதிகம் விழிப்புணர்வு பெற்று பார்வையிடும் கீழடி அகழ்வாராய்ச்சி



 எதிர்பாராமல் கிடைத்த உதவி : 

                                              கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை பார்ப்பதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு மேல் முயற்சி செய்தோம்.அதற்கு எப்படி செல்லலாம் என யோசித்து,நீண்ட தூரத்தில் உள்ளது என்று சொன்னதால் பல நேரங்களில் முயற்சிகளை கைவிட்டு விட்டோம்.கடந்த வாரத்தில் இந்த மாதத்திற்குள் 5ம் கட்ட பணிகள் மூடப்படுவதாக தகவல் வந்தது.உடன் எப்படியாவது சென்று பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்தோம்.தமிழ் மரபு அறக்கட்டளை குழுவில் உள்ள தேவி  அவர்களை தொடர்பு கொண்டு கேட்டேன்.அவர்கள் மதுரையில் பசுமை நடை அமைப்பின் வழியாக செல்லலாம் என கூறினார்.கடந்த ஞாயிறு அன்று காலை 6 மணிக்கெல்லாம் தெப்பக்குளம் வந்து விட்டால் அங்கு இருந்து பசுமை நடை முத்துகிருஷ்ணன் அழைத்து செல்வார் என்று கூறினார்கள்.நாங்களும் (லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி.) இரண்டு நாட்கள் முன்பாக எங்களது உறவினர் மதுரையில் ஒருவரிடம் பேசி ,அவர்களது வீட்டில் இரவு தங்கி மீண்டும் காலை கிளம்பி செல்லலாம் என முடிவெடுத்து அவர்கள் வீட்டுக்கு வருவதாக சொல்லி விட்டோம்.சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் போன் செய்து அவர்கள் திடிர் வெளியூர் பயணத்தால் ,வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.பிறகு எப்படியாவது செல்ல வேண்டும் என்று முடிவு செய்து , மறுநாள் காலை 3 மணிக்கெல்லாம் காரைக்குடியில் கிளம்பி 3.55 கு மதுரை பேருந்தை பிடித்து சுமார் 6.20 மணி அளவில் தெப்பக்குளம் அடைந்தோம்.

 பதற வைத்த பசுமை நடை :
                      
                               தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகில் சுமார் 200 பைக்குகளும் ,சுமார் 50 கார்களும் வரிசையாக நின்றன.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.பிறகுதான் சொன்னர்கள், சார் இது பசுமை நடை.கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வருகிறது.முதலில் யானை மலை உடைக்க முயற்சிக்கும்போது அதனை தடுக்க ஆரம்பித்த இயக்கம் தற்போது 104 பயணங்களை முடித்துள்ளது.இவர்கள் அருகில் உள்ள அகழ்வாராய்ச்சி தொடர்பான இடங்களை மாதந்தோறும் தொடர்ந்து அழைத்து சென்று காண்பித்து வருவதாக சொன்னார்கள்.எந்த விதமான கட்டணமும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து அழைத்து  சென்றதாக உடன் வந்தவர்கள் தெரிவித்தார்கள்.அவரவர் ,அவரவர் வாகனங்களில் அவர்கள் சொல்லும் இடத்துக்கு தெப்பக்குளம் அருகே கூடி அங்கு இருந்து காலை 6 மணிக்கெல்லாம் கிளம்பி 10 மணிக்கெல்லாம் முடித்து விட்டு திரும்பி விடுவதாக தெரிவித்தனர்.

கீழடிக்கு குவிந்த மக்கள் : 
                                     
                                                   கீழடி என்றதும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிளம்பி விட்டதாக அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.கூட்டம் அதிக அளவில் சாலை முழுவதும் வாகனங்களால் நிரம்பி வழிந்தது .முத்துகிருஷ்ணன் தலைமையில் கூட்டம் முழுவதும் காலை 6.30 மணி அளவில் கிளம்பி 7 மணிக்குள் கீழடி அகழ்வாராய்ச்சி இடத்தை அடைந்தோம்.நாங்கள் பேருந்தில் சென்றதால் , எங்களை ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) ஒரு காரில் லிப்ட் கேட்டு ஏற்றி சென்றனர்.கீழடியில் மொத்த கூட்டத்தினரும் ஒரே இடத்தில் அமரவைத்து சுந்தர் காளி ,ஆசைத்தம்பி,முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பேசினார்கள்.பல்வேறு வரலாற்று தகவல்களை தெளிவாக விளக்கினார்கள்.உபயோகமாக இருந்தது.

 தமிழ்மரபு அறக்கட்டளை மூலம் கிடைத்த உதவி :
                                                                        நாங்கள் ( லெ .சொக்கலிங்கம் ,காரைக்குடி ) தமிழ் மரபு அறக்கட்டளை குழுவில் உள்ள தேவி அவர்களையும்,அவரது கணவரையும்,மதுரை சௌராஷ்டிர ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் மதி ஆசிரியையும்,செல்வம் ராமசாமி ஆகியோரையும் அன்றுதான் சந்தித்து பேசினோம்.தேவி அவர்களும் ,அவரது கணவரும் எங்களுக்கு நல்ல முறையில் உதவி செய்தனர்.

கீழடி -  புதிய கண்டுபிடிப்புகள் :

                                               கீழடியில் உள்ளே புதியதாக ஆராய்ச்சி நடைபெறும் இடத்தில் உள்ளே சென்று பார்த்தோம்.அங்கு பல இடங்களில் சுவர்கள்,நீர் கொண்டு செல்லும் கால்வாய்கள், நல்ல நீர் செல்லும் பாதைகள்,கழிவு நீர் செல்லும் பாதைகள் மிக நேர்த்தியாக செங்கல் கொண்டு கட்டப்பட்டு இருந்தது.அதன் அருகில் சில இடங்களில் ஆழத்தில் பார்த்தபோது அடுப்புகள் இருந்தததற்கு ஆதாரங்கள் இருந்தது.அதன் அமைப்பு இருந்தது.அதனை பார்த்த உடன் எங்களுக்கு ஆச்சரியம்.அடுத்த இடங்களில் பார்த்தபோது தொழில் நகரம் அந்த காலத்தில் இருந்ததற்கான சில ஆவணங்களையும் கண்டோம்.எங்களுக்கு (லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) வியப்பாக இருந்தது.

குழாய் மூலம் நீர் செல்லும் அதிசயம் : 

                                                அந்த பகுதியில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது , நீண்ட தூரத்தில் மீண்டும் இதே போன்று நீர் செல்வதற்கான பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தது.வைகை நீர் பாய்ந்த இடங்களில் சுமார் பல நூறு கிலோமீட்டர் பகுதியில் ஆய்வு செய்தபோது இந்த இடத்தில் இதனை கண்டு பிடித்து உள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி தேவை :

                                        பல இடங்களில் மக்கள் வேளாண்மை செய்து வருகின்றனர்.நாங்கள் பார்த்த இடங்களில் ஆங்காங்கே தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ளன.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஆராய்ச்சிகள்  நடைபெற்று கொண்டு உள்ளன .ஆனால்  ஒரு பக்கம் தோண்டிய பிறகு அடுத்த இடத்தை பார்க்கவேண்டும் என்றால் அந்த இடம் விவசாயம் செய்த பகுதியாக உள்ளது.எனவே அரசு உரிய விலையை கொடுத்து பொதுமக்களின் நிலங்களை வாங்கி,அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்காமல் ஏற்பாடுகள் செய்தால் இன்னுமும் பல அறிய தகவல்களை பெறலாம் என்பது உறுதி.

கிடைத்த பொருள்களின் குவியல் :

                                                     பல இடங்களில் கிடைத்த ஓடுகளை ஆங்காங்கே குவியலாக அனைவரின் பார்வைக்கும் வைத்து உள்ளனர்.அவை தொடர்பாக நமக்கு ஒன்றும் தெரியவில்லை.ஆனால் நமது மூதாதையர்கள் அவற்றை வைத்து உள்ளனர் என்று எண்ணும்போது பெருமையாக உள்ளது.பிறகு வெளி பகுதியில் வந்து அங்கும் பல்வேறு ஆராய்ச்சி பகுதிகளை பார்த்து விட்டு , நமது தமிழ் சமூகத்தின் பெருமையை எண்ணி கொண்டே , பசுமை நடையினர் வழங்கிய இரண்டு இட்லியை சாப்பிட்டு விட்டு அவர்களுக்கும் நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.அன்புடன் லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி.
                                                    ஆச்சிரியப்பட வைத்த பசுமை நடை ஏன் ?
                                              காலையில் 6.30 மணிக்கு 500கும் மேற்பட்டோர் இரண்டு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் சென்றதை பார்த்து ஆச்சிரியப்பட்ட பலர்  பல்வேறு வகையில் எங்களை போட்டோ எடுத்து, அமைப்பாளர்களிடமும் பல விதங்களில் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.பசுமை நடை அமைப்பாளர்களுக்கே, இவ்வளவு பேர் கீழடிக்கு வருகை தந்தது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.பொதுவாக 100 முதல் 150 பேர் மட்டுமே வரும் பசுமை நடை நிகழ்வுக்கு 500 பேர் வந்ததற்கு காரணம் , விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு தடை என்கிற தகவலும், கீழடி குறித்து பெரும்பான்மையான தகவல் வெளிப்பாடுகளும் காரணம் ஆகும். 

 அன்புடன் ,
லெ .சொக்கலிங்கம்,
காரைக்குடி .
============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================